இந்தியாவின் 72வது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா விவகாரம் காரணமாக சுமார் நான்காயிரம் பார்வையாளர்கள் மட்டுமே குடியரசு தின நிகழ்ச்சிகளை நேரில் காண அனுமதிக்கப்பட்டனர்.
நாட்டில் அரசியல் அமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டதை நினைவுகூரும் வகையில் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் 1966ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பின்றி இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது.
புதுடெல்லியில் உள்ள ராஜபாதையில் 8.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம். இம்முறை அது 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே நடத்தப்பட்டது.
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அதிபர் ராம்நாத் கோவிந்த் அந்நிகழ்வில் உரையாற்றினார். அணிவகுப்பில் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை சித்திரிக்கும் தமிழக அலங்கார வாகனம் இடம்பெற்றது.
நிகழ்வில் பங்கேற்ற மற்ற வாகனங்கள் பல்வேறு மாநிலங்களின் கலை, கலாசாரத்தை வெளிக்காட்டும் வகையில் இருந்தன. பல்லவர்களின் பெருமையைப் பறைசாற்றும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலின் மாதிரி அடங்கிய வாகனத்துடன் 'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரதநாடு' என்ற பாடல் ஒலிக்க நடனக் கலைஞர்கள் அதற்கேற்ப நடனமாடினர். மேலும் மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நடனங்களும் இடம்பெற்றன. அமர்நாத் கோவில் அலங்காரத்துடன் பங்கேற்ற வாகனம் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
விழாவில் 21 குண்டுகள் முழங்க தேசியகீதம் இசைக்கப்பட தேசியக்கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார் அதிபர் ராம்நாத் கோவிந்த். பின்னர் உரையாற்றிய அவர், என்ன விலை கொடுத்தாவது நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றார். இந்தியா எப்போதும் அமைதியைத்தான் விரும்புகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

