இந்தியாவில் மக்களுக்கு நீதி கிடைப்பதைப் பொறுத்த வரை, மகாராஷ்டிரமும் தமிழ்நாடும் முறையே முதலாவது, இரண்டாவது இடத்தில் இருக்கின்றன.
இதில் உத்தரப் பிரதேசம் படுமோசமான நிலையில் இருப்பதாக 'இந்திய நீதித்துறை அறிக்கை 2020' தெரிவிக்கிறது.
இந்தியாவில் பெரிய, நடுத்தர அளவுள்ள 18 மாநிலங்களில் போலிஸ், சிறைச்சாலைத் துறை, நீதித்துறை, சட்ட உதவி போன்றவை எந்த அளவுக்குச் செயல்திறன் மிக்கவையாக இருக்கின்றன என்பதை ஒப்பிட்டு அந்த ஆய்வு பல தகவல்களை வெளியிட்டு உள்ளது.
டாட்டா அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு முடிவுகளைப் பார்க்கையில், நான்கு பிரிவுகளிலும் ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிரா முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஆய்வில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இந்த ஆண்டு 2வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
நீதித்துறையை மட்டும் பார்த்தால் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
நாட்டிலேயே பீகாரில்தான் பெண் போலிசார் அதிகம் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அந்த மாநிலத்தின் போலிஸ் படையில் போலிசாக வேலை பார்ப்போரில் சுமார் கால்வாசிப் பேர் மாதர்.
இதில் இமாச்சலப்பிரதேசம் அடுத்த இடத்தையும் தமிழ்நாடு 3வது இடத்தையும் பெறுகின்றன.
தமிழ்நாட்டில் போலிசாரில் 18.5 விழுக்காட்டினர் பெண்கள். ஆனால் பெண் போலிஸ் அதிகாரிகளைப் பார்க்கையில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. தமிழக போலிஸ் படையில் பணியாற்றும் பெண்களில் சுமார் 25 விழுக்காட்டினர் அதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள்.
நாடு முழுவதும் பார்க்கையில் மொத்தத்தில் சிறைச்சாலைகளில் இருப்பவர்களின் எண்ணிக்கை கூடி இருக்கிறது. அவர்களில் 69 விழுக்காட்டினர் இன்னமும் விசாரணை முடியாமல் தீர்ப்பை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

