தனியார் பல்கலைக்கழகம் ஒன்று பட்டப்படிப்புக்கான போலிச் சான்றிதழ்களை ஆயிரக்கணக்கானோருக்குப் பணம் பெற்றுக் கொண்டு வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மத்திய அமலாக்கத்துறை அப்பல்கலைக்கழகத்தின் கோடிக்கணக்கான சொத்துகளை முடக்கி வைத்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் சோலான் நகரில் அமைந்துள்ளது மானவ் பார்தி எனும் அத்தனியார் பல்கலைக்கழகம். இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்வேறு பட்டப்படிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
இப்பல்கலைக்கழகம் ஏராளமானோருக்கு போலிச் சான்றிதழ்கள் வழங்குவதாக தொடர் புகார்கள் எழுந்தன. அவை குறித்து அம்மாநில போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இதையடுத்து மத்திய அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகியவற்றுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
மேலும் இமாச்சல பிரதேச நிதி புலனாய்வுப் பிரிவும் விசாரணையில் ஈடுபட்டது. இதில் 17 மாநிலங்களைச் சேர்ந்த 36 ஆயிரம் பேருக்கு இப்பல்கலைக்கழகம் தரகர்கள் மூலம் போலிச் சான்றிதழ் அளித்திருப்பது அம்பலமானது.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த இமாச்சல பிரதேச போலிசார் எட்டு பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இத்தனியார் பல்கலைக்கழகத்துக்கு சுமார் 194 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றை மத்திய அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.