ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே அடையாளம் தெரியாதவரின் சடலத்தை இரண்டு கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்று, இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்த பெண் உதவி ஆய்வாளருக்கு காவல்துறை உயரதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே அடவி கொத்தூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத சடலம் இருப்பதாக பொதுமக்கள் போலிசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்ற காசிபுக்கு காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் சிரிஷா, சடலத்தை அங்குள்ள பொதுமக்கள் மூலம் மீட்டு இறுதிச்சடங்கு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.
ஆனால், அதற்கு பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை. எனவே, உதவி ஆய்வாளர் சிரிஷா, உதவிக்கு வந்த சிலருடன் சேர்ந்து சடலத்தை தூக்குப் படுகையில் வைத்து தனது தோளில் சுமந்தபடி இரண்டு கிலோமீட்டர் நடந்து, ஊருக்கு வெளியே கொண்டு வந்தார்.
பின்னர் 'லலிதா' எனும் தன்னார்வ அமைப்பின் மூலம் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
அது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெகுவாகப் பரவிய நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகள் எஸ்ஐ சிரிஷாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்தனர். பொதுமக்களும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.

