காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலைக் கடுமையாகச் சாடி வருபவர் பிரதமர் மோடி. அவரது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் இதுவரை அரசியலில் இல்லை. இருப்பினும் மோடியின் அண்ணன் பிரகலாத்தின் மகள் சோனல் மோடி (படம்) தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்.
குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தல் இம்மாதம் 21, 28 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட பல்வேறு அரசியல் தலைவர்களின் வாரிசுகள் பாஜகவிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார்கள்.
மோடியின் சகோதரர் மகள் சோனல் மோடி, அகமதாபாத் நகராட்சிக்குட்பட்ட போடக்தேவ் வார்டில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பாஜக தலைமையிடம் மனு செய்துள்ளார்.
ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது சந்தேகம்தான். காரணம், பாஜக நிர்வாகிகளின் வாரிசுகள், உறவினர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாது என்று மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் கூறிவிட்டார்.