புனித யாத்திரை சென்ற 14 பேர் பலியான சம்பவத்தில் 4 குழந்தைகள் உயிர்தப்பின
கர்னூல்: ஆந்திர மாநிலத்தில் நேற்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். நான்கு குழந்தைகள் உயிர்தப்பின.
ஆந்திராவைச் சேர்ந்த 18 பேர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டு டெம்போ டிராவலர் வேனில் புறப்பட்டனர்.
கர்னூல் மாவட்டம் வேல்துர்தி தாலுகாவைச் சேர்ந்த மாதபுரம் கிராமம் அருகே உள்ள ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 4 மணியளவில் வேன் வேகமாகச் சென்றுகொண்டு இருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக சாலை நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி சாலையின் மறுபக்கமாக விழுந்து சாய்ந்தது வேன். அந்த நேரத்தில் எதிர்த் திசையில் இருந்து வந்த லாரியின் சக்கரத்தில் வேன் சிக்கி நொறுங்கியது. மேலும் சில மீட்டர் தூரத்துக்கு வேன் இழுத்துச் செல்லப்பட்டது.
இந்த மோசமான விபத்தில் சிக்கிய வேனுக்குள் இருந்தவர்களில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. எட்டுப் பேர் பெண்கள், ஐவர் ஆண்கள், ஒரு குழந்தை ஆகியோர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் யாஸ்மின், அஸ்மா, காஸிம், முஷ்டாக் என்னும் நான்கு குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பின. அவர்கள் அனைவரும் பத்து வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் போலிசார் தெரிவித்தனர்.
சாலையில் ஓடிக்கொண்டு இருந்த தமது லாரி முன்னால் திடீரென வேன் வந்து விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர் உதவி கேட்டு குரல் எழுப்பினார். அதனைக் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து வேனுக்குள் அலறிக்கொண்டு இருந்த குழந்தைகளை மீட்டதாகவும் அந்த போலிஸ் அதிகாரி தெரிவித்தார். வேன் ஓட்டுநர் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை என்றார் அவர்.
சம்பவம் பற்றி அறிந்ததும் பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சனிக்கிழமை அதிகாலை நேரம் பெங்களூருவில் நிகழ்ந்த ஒரு விபத்தில் நான்கு ஆடவர்கள் மாண்டனர். மங்களூரு-பெங்களூரு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அவர்களின் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 'கன்டெய்னர் லாரி' ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. உயிரிழந்த நால்வரும் 25க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதினர் என்றும் கணினிப் பொறியாளர்களாக பணியாற்றி வந்தவர்கள் என்றும் போலிசார் கூறினர்.