கால்வாய்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நேற்று காலை நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள சிதி என்ற இடத்தில் இருந்து சாட்னா என்ற நகரத்துக்கு இயக்கப்படும் பேருந்தில் நேற்று காலை 54 பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.
பாட்னா என்ற கிராமத்துக்கு அருகே பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி அருகே உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.
காலை சுமார் 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது என்றும் உடனடியாக பேருந்தில் இருந்தவர்களைக் காப்பாற்ற பலர் முயற்சி மேற்கொண்டதாகவும் விபத்து நிகழ்ந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஏழு பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மதியம் வரை 40 சடலங்களை மீட்புப் படையினர் மீட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துப் பகுதிக்கு விரைந்த மூத்த அமைச்சர்கள் மீட்புப்பணிகளைப் பார்வையிட்டு துரிதப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக நேற்று காலை மாநில அரசு நிகழ்ச்சிகள் ரத்தாகின.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. போலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார்.
நடந்த சம்பவம் மிகவும் துயரமானது என்று குறிப்பிட்டுள்ள அவர், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.