5ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: பள்ளித் தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனை, உடந்தையாக இருந்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை

ஐந்தாம் வகுப்பு படித்து வந்த, 11 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனையும், அந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்த ஓர் ஆசிரியருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பீகார் மாநிலம் புல்வாரி ஷரீப் பகுதியில் இயங்கி வந்த பள்ளிக்கூடம் ஒன்றில், 5ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். உடல் நலக் குறைவு காரணமாக மாணவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரியவந்தது.

இது குறித்து, சிறுமியிடம் மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் விசாரித்தபோது, பள்ளி தலைமையாசிரியர் பாலியல் பலாத்கார செயலில் ஈடுபட்டதும் அதற்கு ஓர் ஆசிரியர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

பாட்னாவின் புல்வாரி ஷரீப் பகுதியில் ஆறாம் வகுப்பு வரையில் மாணவர்கள் பயிலக்கூடிய ‘நியூ சென்ட்ரல் பப்ளிக் ஸ்கூல்’ எனும் பள்ளியை நடத்தி வந்தார் அரவிந்த் குமார் எனும் ராஜ் சிங்ஹானியா. அந்தப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார் அபிஷேக் குமார்.

ஐந்தாம் வகுப்பில் படித்து வந்த அந்த மாணவியை பள்ளியின் ஒரு கட்டடத்தில் அறை ஒன்றுக்கு அனுப்பி வைத்தார் அபிஷேக் குமார். அந்த அறையில் படுக்கை ஒன்று இருந்ததாகவும் சுமார் 2 மாத காலத்தில் அரவிந்த் அந்தச் சிறுமியை 6 தடவை பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பாட்னா சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

11 வயது சிறுமி கர்ப்பமாக இருந்ததையடுத்து, அந்தக் கருவைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவுக்கு நடத்தப்பட்ட மரபணு சோதனையில் அரவிந்த் குமார்தான் சிறுமியின் கர்ப்பத்துக்குக் காரணமானது உறுதியானது. சிறுமியின் தந்தை தினக்கூலியாக பணிபுரிந்து வந்ததால் அந்தச் சிறுமிக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சம்பவத்தின் தொடர்பில் இருவரும் கைதானதையடுத்து அந்தப் பள்ளி மூடப்பட்டது.

இந்நிலையில், நீதிபதி அவதேஷ் குமார் பிறப்பித்த உத்தரவில், மாணவி பலாத்கார வழக்கில் முக்கியக் குற்றவாளி, பள்ளி தலைமையாசிரியராக இருந்த அரவிந்த் குமாருக்கு மரண தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மற்றொரு குற்றவாளியான, ஆசிரியர் அபிஷேக் குமாருக்கு ஆயுள் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!