தடுப்பூசி மைத்ரி’ திட்டத்தின் கீழ் பல்வேறு உலக நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி வழங்கி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழலில் மோதல்களைத் தடுத்தல் என்ற தலைப்பில் ஐநா பாதுகாப்பு மன்றத்தின் காணொளி மூலம் விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், அண்டை நாடுகள் உட்பட 25 உலக நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், 49 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடினமான சூழலில் பணியாற்றும் ஐநா அமைதிப்படையினரைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இரண்டு லட்சம் டோஸ் தடுப்பூசியை இந்தியா பரிசாக வழங்கும் என்றும் இதற்காக இந்தியா மகிழ்ச்சி அடைவதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
“பிறரது நலன்களையும் மனதில் வைத்து எப்போதும் பணி செய்யுங்கள் என்று பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதை மனதில் வைத்தே கொரோனா கால சவால்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. அந்தவகையில் உலகளவில் தடுப்பூசி தொடர்பிலான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உலகின் மருந்தகம் முன்னோக்கி அடியெடுத்து வைக்கிறது,” என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.
இதற்கிடையே கொரோனா நோய்த்தொற்று மேலாண்மை தொடர்பான வட்டார மாநாடு இந்திய அரசின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது.
பிரேசில், தென்னாப்பிரிக்க பயணிகளுக்கு சொந்தச் செலவில் கட்டாய பரிசோதனைபிரேசில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் இந்தியாவுக்கும் பரவி உள்ளது.
இதையடுத்து அவ்விரு நாடுகள் மட்டுமல்லாமல் பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவருக்கும் புதிய கிருமித்தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை நடத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு இந்தியாவுக்கும் பரவி உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த உருமாறிய கொரோனா கிருமியைவிட பிரேசில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய கொரோனா கிருமிகள் மனிதர்களின் நுரையீரலை வேகமாகவும் எளிதாகவும் பாதிக்கும் எனத் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் இந்தியாவில் தரையிறங்கிய கையோடு அவர்களது சொந்தச் செலவில் புதிய வகை கிருமித்தொற்றுப் பாதிப்பைக் கண்டறிவதற்கான பரிசோதனை கட்டாயமாக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.