கோல்கத்தா: மேற்கு வங்க தொழிலாளர் துறை அமைச்சர் ஜாகீர் உசேன் மீது வெடிகுண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார்.
இச்சம்பவத்துக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜாகீர் உசேனை வேறு கட்சியில் சேருமாறு அவருக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதன் ஒரு பகுதியாகத்தான் இத்தாக்குதல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் ஜாகீர் உசேன் முர்ஷிதாபாத்தில் இருந்து கோல்கத்தா நகருக்குச் செல்வதற்காக நிம்திதா ரயில் நிலையத்திற்குச் சென்றபோது அடையாளம் தெரியாத சிலர் திடீரென அவர் மீது வெடிகுண்டுகளை வீசினர்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பலர் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெரிய சதி அடங்கியுள்ளதாக முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.
"ரயில்வே துறை மெத்தனமாகச் செயல்பட்டுள்ளது. அமைச்சர் ஜாகீர் உசேன் மீது முன்கூட்டியே திட்டமிட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.
"இந்தத் தாக்குதலில் அமைச்சருடன் இருந்தவர்கள், பொதுமக்கள் என 26 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை மாநில சிஐடி பிரிவு விசாரிக்கும்," என முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.

