இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 10 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு முதல் கொவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்த மைல்கல்லை எட்டியுள்ள இரண்டாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவில் 10.4 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போட 34 நாள்கள் ஆகின. அமெரிக்கா இந்த எண்ணிக்கையை எட்ட 31 நாட்கள் எடுத்துக்கொண்டது.
"இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டிற்கு இது மாபெரும் சாதனையாகும். அடுத்த சில வாரங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும்," என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் 6.3 மில்லியன் பேர் சுகாதாரப் பணியாளர்களும் 3.4 மில்லியன் பேர் முன்களப் பணியாளர்களும் ஆவர். இதுபோக, 760,000 சுகாதாரப் பணியாளர்கள் இரண்டாவது தடுப்பூசியையும் போட்டுக்கொண்டனர்.
இதில் குறிப்பிடும்படியாக, கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் ஆக அதிகமாக 6,58,674 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. மாநில வாரியாக பார்க்கையில், உத்தரப் பிரதேசத்தில் ஆக அதிகமாக 1.13 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் மகாராஷ்டிராவும் (850,000 பேர்) குஜராத்தும் (840,000 பேர்) வந்தன.
இதுவரை இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ள 21.5 மில்லியன் தடுப்பூசிகளில் கிட்டத்தட்ட பாதியளவு மட்டுமே மக்களுக்கு போட்டப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையை நெருங்குவது குறித்து சில மாநில அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். வேறு சில அதிகாரிகளோ, தடுப்பூசிகள் காலாவதியாவதற்குள் அவற்றை மக்களுக்குப் போட்டுவிடலாம் என நம்பிக்கையுடன் உள்ளனர்.
மூன்றாம் கட்டத் தடுப்பூசித் திட்டத்தில் மக்கள் எவ்வாறு சேரப்போகிறார்கள் என்பது குறித்த தெளிவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
"மூன்றாம் கட்டத் தடுப்பூசித் திட்டம் மார்ச் மாதம் தொடங்கும் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டாலும் அதுகுறித்து மத்திய அரசிடமிருந்து தெளிவு பெற நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் பெற்றுக்கொண்ட தடுப்பூசிகள் அனைத்தும் மே மாதம் காலாவதியாகின்றன. மூன்றாம் கட்டத் தடுப்பூசித் திட்டம் தொடங்கியவுடன் அவற்றைப் பயன்படுத்த முடியும் என நம்புகிறோம்," கர்நாடகாவைச் சேர்ந்த அருந்ததி சந்திரசேகர் என்பவர் கூறினார்.

