தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று மின் கம்பத்தில் மோதிய சம்பவம் விஜயவாடாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தோஹாவில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு நேற்று முன்தினம் மாலை 64 பயணிகளுடன் வந்தது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்.
அனுமதிக்கப்பட்ட ஓடுபாதையில் தரையிறங்கியபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து அந்த விமானம் தள்ளாடியது.
பின்னர் ஓடுபாதையின் ஓர் ஓரமாகத் தரையிறங்கியபோது அங்குள்ள வழிகாட்டும் விளக்குகள் இருந்த மின்கம்பத்தின் மீது அதன் இறக்கை வேகமாக மோதியது.
இதனால் மின் கம்பம் ஒருபக்கமாக சாய விமான இறக்கை லேசாக சேதமடைந்த போதும் இறுதி நேரத்தில் சாமர்த்தியமாகச் செயல்பட்டு விமானத்தை அந்த இடத்திலேயே நிறுத்தினார் விமானி.
அதன் பின்னர் விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டனர்.
இதனால் விஜயவாடா விமான நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
உயிருடற் சேதங்கள் ஏதுமில்லையென விமான நிலைய இயக்குநர் மதுசூதனன் ராவ் செய்தியாளர்களிடம் உறுதி செய்துள்ளார்.

