இந்தியாவில் நேற்றுக் காலை நிலவரப்படி 11.70 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் புதிதாக அதிக அளவில் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருவதால் தடுப்பூசி போடும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நாள் ஒன்றுக்கு 10,000 முதல் 20,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை 50,000க்கு உயர்த்தவும் தடுப்பூசி போடும் பணிகளில் தனியார் துறையினரை அதிகம் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சுகாதாரத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஏற்கெனவே தனியார் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். 10,000 பேருக்கு தடுப்பூசி போடும் பணியில் 2,000 பேர் தனியார் துறையினரால் கவனிக்கப்படுவதாக அமித் ஷா கூறி னார்.
அடுத்த கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியில் தனியார் துறையினரின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் கால்வாசிப்பேர், அதாவது 270 மில்லியன் பேர் 50 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நேற்றுக் காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 10,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 1,10,16,434ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பால் 78 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 1,56,463ஆக உயர்ந்துள்ளது.

