இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று

இந்தியாவில் கொவிட்-19 தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவிலும் கேரளாவிலும் கொரோனா பரவல் மறுபடியும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் 8,807 பேர், கேரளாவில் 4,106 பேர் உட்பட புதிதாக 16,738 பேரை கொரோனா தொற்றிவிட்டதாக இன்று காலை 8 மணிக்கு இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. கிருமித் தொற்றால் மேலும் 138 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 27 நாள்களில் பதிவான பாதிப்பு, மரண எண்ணிக்கையில் இவையே ஆக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிர மாநில, வாஷிம் நகரில் ஒரே விடுதியைச் சேர்ந்த 225 மாணவர்களையும் பணியாளர்கள் நால்வரையும் கிருமி தொற்றி இருக்கிறது. அம்மாணவர்கள் பெரும்பாலும் அமராவதி, யவத்மால் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவ்விரு மாவட்டங்களில்தான் அண்மைக்காலமாக கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது என்றும் சொல்லப்பட்டது.

கடந்த 129 நாள்களில் இல்லாத அளவிற்குத் தொற்று பாதிப்பு பதிவாகி இருப்பதை அடுத்து, மகாராஷ்டிர அரசும் மும்பை போலிசும் வழிகாட்டி நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் சமய, சமூக, அரசியல் கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிருமித்தொற்று காரணமாக 80 பேர் இறந்துவிட்டனர். இவ்வாண்டில் இதற்குமுன் ஒரே நாளில் இந்த அளவிற்கு கொரோனா மரணங்கள் பதிவானதில்லை.

மகாராஷ்டிராவில் இதுவரை 2,121,119 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 51,937 பேர் மாண்டுவிட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,799 பேர் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டனர். தற்போது, 151,708 பேர் கிருமித்தொற்றுக்காக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 74 விழுக்காட்டினர் மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!