தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஹரிதாஸ்பூர் என்னும் கிராமம் பாலின சமத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக பெண் குழந்தைகளைக் கொண்டாடி வருகிறது. பெண் குழந்தை பிறந்ததும் அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன் கிராமத்தினர் அனைவரும் ஒன்றுகூடி இனிப்பு வழங்கி மகிழ்கின்றனர்.
அந்த அலுவலகத்தை வண்ண வண்ண விளக்குளால் அலங்கரிக்கின்றனர். குழந்தையின் வீட்டுக்கு மேளதாளத்துடன் சென்று பெற்றோரை வாழ்த்துகின்றனர். பிறந்த பெண் குழந்தை ஒவ்வொன்றின் பெயரிலும் வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டு ரூ.1,000 செலுத்தப்படுகிறது. இவ்வாறு ஊக்கமளிப்பதன் விளைவாக கடந்தாண்டு இவ்வூரில் பிறந்த 14 குழந்தைகளில் பெண் குழந்தைகள் எட்டு. இங்கு புகழ்பெற்ற சில்குர் பாலாஜி கோயிலின் தலைமை அர்ச்சகர் சிஎஸ் ரங்கராஜன் கடந்த வாரம் 'பாலிகா வந்தனம்' என்னும் நிகழ்ச்சியை நடத்தினார். கடவுளின் அவதாரமாக பெண்களை மதித்துப் போற்றும் நிகழ்ச்சி அது.