ஹர்ஷ் வர்தன்: தினமும் 1.5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி
புதுடெல்லி: நாடு முழுவதும் தினமும் 1.5 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மருத்துவ மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியா கொரோனா கிருமித்தொற்று ஒழிப்பு நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக குறிப்பிட்டார்.
கொரோனா கிருமியை வெல்ல வேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
"அன்றாடம் தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 20 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
"பிற நாடுகளைப் போல அல்லாமல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி சீராக உள்ளது. மேலும் இந்தத் தடுப்பூசிகள் பாதுகாப்பு மிக்கதாகவும் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளன," என்றார் ஹர்ஷ் வர்தன்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா உருவெடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், இதுவரை இந்தியாவில் இருந்து 62 நாடுகளுக்கு 55 மில்லியன் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
"உலகின் ஏழை நாடுகளில் கொரோனா கிருமித்தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் தடுப்பூசி போடுவதால் மட்டும் இந்தியா பாதுகாப்பாக இருக்க முடியாது. எனவேதான் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகிறது.
"கொரோனா கிருமித்தொற்று ஒழிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளோம். இதில் வெற்றி பெற வேண்டுமானால் மூன்று நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
"தடுப்பூசி திட்டத்தை அரசியலாக்கக் கூடாது, இரண்டாவதாக தடுப்பு மருந்தின் பின்னால் உள்ள அறிவியலை நம்புவது, நம்மைச் சுற்றி உள்ளவர்கள் உரிய நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்வது ஆகியவை மிக முக்கியம்," என்றார் அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.

