கொவிட்-19 தடுப்பூசி நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தியா கவலை அடைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,854 பேரை கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நேற்றுக் காலை 8 மணிக்கு அந்நாட்டு சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இது, கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அதிகரிப்பு என்றும் முந்தைய நாளைக் காட்டிலும் 27% அதிகம் என்றும் கூறப்பட்டது. கடைசியாக சென்ற ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி 22,273 பாதிப்புகள் பதிவாகி இருந்தன. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 126 பேர் கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா (13,659), கேரளா (2,475), பஞ்சாப் (1,393), கர்நாடகா (760), குஜராத் (675) ஆகிய ஐந்து மாநிலங்களே மோசமான பாதிப்புக்குள்ளானதாக அமைச்சின் தரவுகள் குறிப்பிட்டன.
குறிப்பாக, மகாராஷ்டிராவின் நாக்பூரில் 1,800க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாக, அந்நகரில் வரும் 15 முதல் 21ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு நகரங்களிலும் முடக்கநிலை அறிவிக்கப்படலாம் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே கோடிகாட்டியுள்ளார்.
கடந்த வாரத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், டெல்லி, குஜராத், கர்நாடகா, அரியானா ஆகிய மாநிலங்களில் அன்றாட புதிய பாதிப்புகள் தேசிய சராசரியான 2.29 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகமாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, அம்மாநிலங்களுடன் சட்டீஸ்கர், மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவுவதற்காக உயர்நிலை மத்தியக் குழுக்கள் அனுப்பப்பட்டன.
இதனிடையே, நேற்று முன்தினம் 1.317 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டதாகவும் இதுவரை 25 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

