ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விசாரணை; ஐந்து பேர் கைது
புதுடெல்லி: தேசிய புலனாய்வு முகவை (என்ஐஏ) நேற்று மூன்று மாநிலங்களில் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ள இடங்களில் அதிகாரிகள் சோதனையிட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் மொத்தம் ஏழு இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு உதவும் சிலரும் அவர்கள் சார்ந்த சில அமைப்புகளும் தேசிய புலனாய்வு முகமையின் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து ஒரே சமயத்தில் மூன்று மாநிலங்களை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டது.
டெல்லியில் ஜஃப்ராபாத் பகுதியிலும் கர்நாடகாவில் பெங்களூரு நகரில் உள்ள இரண்டு இடங்களிலும் புலனாய்வு முகவை அதிகாரிகள் சோதனையிட்டு பல ஆவணங்களைக் கைப்பற்றியதாகத் தெரிகிறது.
இதேபோல், கேரளாவின் கொச்சி, குனூர், மலப்புரம் பகுதிகளில் உள்ள நான்கு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சட்ட விரோத செயல்பாடுகளுடன் தொடர்புடைய அமைப்புகள், அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் எனக் கூறப்படுகிறது.
சோதனை நடவடிக்கையை அடுத்து, சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதேசமயம் தலைமறைவாக உள்ள சிலருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
நேற்று நடந்த சோதனைக்குப் பிறகு ஐந்து பேர் கைதாகியுள்ளனர் என்றும் மேலும் ஏழு பேரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கேரள ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
மலப்புரம் பகுதியில் அரசியல் கட்சிப் பிரமுகர் ஒருவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது, பாதுகாப்புக்காக அதிரடிப்படை வீரர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
சோதனை நடவடிக்கை முடிவுக்கு வந்த பிறகே கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என தேசிய புலனாய்வு முகவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
"மொத்தம் ஏழு இடங்களில் விரிவான சோதனை நடைபெறுகிறது. ஏற்கெனவே கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
"சோதனையிடப்படும் இடங்களின் உரிமையாளர்களிடம் முதற்கட்ட விசாரணை நடைபெறும். அதன் பிறகு அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புண்டு. சில அமைப்புகள் எந்த வகையில் முறைகேடாகவும் தீவிரவாத செயல்களுக்கு உதவிகரமாகவும் இருந்தன என்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்," என புலனாய்வு முகவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகவை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தொடர்பாக புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே நேற்று சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.

