கோல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தேர்தல் பிரசாரத்தின்போது தாக்குதல் நடந்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில், அவர் போட்டியிடும் நந்தி கிராம் தொகுதியின் பாதுகாப்பு அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கடந்த 10ஆம் தேதி முதல்வர் மம்தா பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சிலர் திடீரென தாக்கியதாகவும் அதனால் தமது காலில் காயம் ஏற்பட்டதாகவும் முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.
எனினும், அவரை யாரும் தாக்கவில்லை என்றும் அவர் எதிர்கொண்டது ஒரு விபத்துதான் என்றும் தேர்தல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நந்தி கிராம் தொகுதியில் பாதுகாப்பு அதிகாரியை பணி இடைநீக்கம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
மேலும் அவர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக நந்திகிராம் தொகுதி அடங்கியிருக்கும் புர்பா மேதினிபூர் மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், காவல்துறை கண்காணிப்பாளரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இருநூறுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காரக்பூரில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மேற்கு வங்க மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா திடீரென திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவர் கட்சியின் துணைத் தலைவராக நியமித்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

