புதுடெல்லி: சமூக வலைத்தள நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் மிரட்டப்படவில்லை என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த ஊழியர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவியது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், நாடாளுமன்றத்தில் அறிவித்தபடி, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் அரசையும் பிரதமரையும் அல்லது எந்தவொரு அமைச்சரையும் விமர்சிக்க முடியும் என அதில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் மத்திய அரசு வரவேற்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதேவேளையில், வன்முறையை ஊக்குவித்தல், பரவலான வகுப்புவாத பிளவு, பயங்கரவாதத்தை தூண்டுவது போன்றவை கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
"எழுத்துபூர்வமாக அல்லது வாய்மொழியாக மத்திய அரசின் எந்தவொரு அறிவிப்பும் சமூக வலைத்தள நிர்வாகிகளை சிறைத்தண்டனையைச் சுட்டிக்காட்டி அச்சுறுத்தவில்லை.
"எனினும் இந்தியாவின் பிற வணிகங்கள் போலவே நாட்டின் சட்டங்களையும் இந்திய அரசியலமைப்பையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் சமூக வலைத்தளங்களுக்கும் உண்டு," என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

