செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

மொட்டை அடித்து எதிர்ப்பு

தெரிவித்த காங்கிரஸ் தலைவி

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தமக்கு வாய்ப்பு வழங்கப்படாததைக் கண்டித்து அம்மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி லத்திகா சுபாஷ் மொட்டை அடித்து தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இம்முறை அவர் எட்டுமன்னூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் கட்சித் தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் தமது பதவியில் இருந்து உடனடியாக விலகிய அவர், திருவனந்தபுரத்தில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலக முற்றத்தில் அமர்ந்து தன் தலையை மொட்டை அடித்துக்கொண்டார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி

அமராவதி: ஆந்திராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 75 நகராட்சிகளில் 73 இடங்களை அக்கட்சி கைப்பற்றியது. மேலும் மொத்தமுள்ள 12 மாநகராட்சிகளில் 11ல் அக்கட்சி வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மொத்தம் உள்ள 671 வார்டுகளில், 425 வார்டுகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றிய நிலையில் தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வி கண்டுள்ளன.

நதிநீர் பங்கீடு: பாகிஸ்தான் - இந்தியா இடையே பேச்சுவார்த்தை

புதுடெல்லி: சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீரைப் பகிர்ந்துகொள்வது குறித்து பாகிஸ்தான், இந்தியா இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் எதிர்வரும் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1960ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆண்டுதோறும் நதிநீர் பங்கீடு தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கம். எனினும் கொரோனா விவகாரத்தால் கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்தாண்டு நிலைமை கட்டுக்குள் இருப்பதால் டெல்லியில் மீண்டும் கூட்டம் நடைபெற உள்ளது.

திமுகவுக்கு அதிக தொகுதிகள்: புதுவை காங்கிரசார் கடும் எதிர்ப்பு

புதுவை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியது காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நேற்று முன்தினம் அக்கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மத்தியில் மோதல் வெடித்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் திமுகவுக்கு ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை 13 தொகுதிகள் தரப்பட்டுள்ளன. இது புதுவை காங்கிரஸ் பிரமுகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் திமுகவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டதாக அவர்கள் புகார் எழுப்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிருப்தியாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் மற்றொரு பிரிவினர் ஆவேசமடைந்தனர். இதையடுத்து இரு தரப்பினரும் நாற்காலிகளை வீசியெறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். கூச்சலும் பதற்றமும் அதிகரித்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு அமைதி திரும்பியுள்ளது.