தேர்தல் அலுவலகம் முற்றுகை; கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன
கோல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்ட நிலையில் பாஜக தொண்டர்களும் நிர்வாகிகளும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வேட்பாளர் தேர்வு மிக மோசமாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ள அதிருப்தியாளர்கள் திங்கட்கிழமை கோல்கத்தாவில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் பாஜகவில் இணைந்த பலர் தேர்தலில் களமிறக்கப்பட்டதே தொண்டர்களின் கோபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
திங்கட்கிழமை கோல்கத்தாவில் நடந்த போராட்டத்தின்போது பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பாஜக தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே திரண்டிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் போலிசார் அமைத்திருந்த தடுப்பரண்களை மீறி அலுவலகத்துக்குள் நுழைய முற்பட்டனர்.
மேலும் வேட்பாளர் பட்டியலில் உள்ள சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தனர்.
கோல்கத்தாவைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள பாஜக அலுவலகங்களும் அக்கட்சியினரால் சூறையாடப்பட்டதாகத் தெரிகிறது.
சில இடங்களில் பாஜக அலுவலகம், தேர்தல் பணிமனைகளுக்கு எதிர்ப்பாளர்கள் பூட்டு போட்டனர்.
தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றும் நடந்த சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானவை என்றும் பாஜக செய்தி தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
எனினும் இது தற்காலிகமான பின்னடைவுதான் என்றும் விரைவில் இயல்புநிலை திரும்பும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கட்கிழமை கோல்கத்தாவில்தான் இருந்தார். அக்கட்சியின் தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவும் மேற்கு வங்கத்தில் ஒரு நாள் பிரசாரம் மேற்கொள்ள திங்கட்கிழமை மாலை கோல்கத்தா வந்தடைந்தார்.
கட்சியின் முக்கிய தலைவர்கள் வந்திருப்பதையும் பொருட்படுத்தாமல் பாஜகவினர் நடத்திய போராட்டம் அக்கட்சித் தலைமையை யோசிக்க வைத்திருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

