கோல்கத்தா: தனது குரலும் இதயமும் செயல்படும்வரை தாம் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து போராடப் போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
புருலியா மாவட்டம் ஜால்டாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், சதிகளால் தம்மை தடுத்து நிறுத்த முடியாது என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.
"சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக அதன் தலைவர்களுடன் டெல்லியில் இருந்து வந்துள்ளது. ஆனால் வங்காளம் அவர்களுக்கு கிடைக்காது.
"சில நாள்கள் பொறுத்திருங்கள், எனது கால்கள் குணமாகிவிடும். அதன்பிறகு உங்கள் கால்கள் வங்காள மண்ணில் சுதந்திரமாக நடமாடுகிறதா என்று பார்க்கிறேன்," என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசினார் முதல்வர் மம்தா.
எனினும் யாருக்கு இந்த எச்சரிக்கை என்பதை அவர் சுட்டிக்காட்டவில்லை.
மேற்கு வங்காளத்தில் கடந்த பத்தாண்டுகளில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான நலத்திட்டப் பணிகள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமது அரசு செயல்படுத்திய மேம்பாட்டு திட்டங்கள்போன்று உலகில் வேறு எந்த அரசும் செயல்படுத்தியதில்லை என்றார்.
பாஜகவின் பிரதமரால் நாட்டை வழிநடத்த முடியவில்லை என்றும் பிரதமர் முற்றிலும் திறமையற்றவர் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
கடந்த 10ஆம் தேதியன்று மம்தா தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்த பிறகு நிகழ்ந்த சம்பவத்தில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதற்கு பாஜகவின் சதியே காரணம் என அவர் சாடி இருந்தார்.
இந்நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் அவர் தமது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.

