புதுடெல்லி: வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்களுக்கு ஆதரவாக தாம் துணை நிற்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மத்திய அரசு லாபத்தை தனியார்மயமாக்குகிறது என்றும் நஷ்டத்தை மட்டும் அரசுடைமையாக்குவதாகவும் விமர்சித்துள்ளார்.
"பொதுத்துறை வங்கிகள் பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்படுகின்றன. இதன் மூலம் இந்தியாவின் நிதி பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் இவ்விஷயத்தில் கடுமையாக சமரசம் செய்யப்படுகிறது," என்று ராகுல் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக நீடித்தது.
இதில் மேலாளர்கள், அதிகாரிகள் என சுமார் பத்து லட்சம் பணியாளர்கள் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கிப் பணிகள் முற்றிலுமாக முடங்கியதால் பொதுமக்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

