புதுடெல்லி: ராணுவப் புரட்சிக்குப் பின்னர் மியன்மாரில் இருந்து 383 பேர் எல்லையைக் கடந்து மிசோராம் மாநிலத்துக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இத்தகவலை மிசோராம் அரசு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மியன்மாரில் ராணுவப் புரட்சிக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்நிலையில் அங்கிருந்து இந்திய எல்லையைக் கடந்து மிசோராம் மாநிலத்துக்குள் பலர் அகதிகளாக வருவது அதிகரித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து இதுவரை அகதிகளாக வந்தவர்களில் சுமார் 98 விழுக்காட்டினர் தாங்கள் மியன்மார் காவல்துறை, தீயணைப்புத் துறையைச் சார்ந்தவர்கள் எனக் கூறியுள்ளனர்.
எனினும் அதற்குரிய ஆவண ஆதாரங்கள் எதையும் அவர்கள் காண்பிக்கவில்லை என மிசோராம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை அகதிகளாக வந்துள்ள 383 பேரில், 297 பேரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் 86 பேரின் ஆவணங்களை உறுதி செய்ய வேண்டியுள்ளதாகவும் மிசோராம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மார், மிசோராம் மாநிலத்துக்கு இடையே 510 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைப் பகுதி உள்ளது. மிசோராம் மாநிலத்தின் ஆறு மாவட்டங்கள் இந்த எல்லையோரப் பகுதிகளில் அமைந்துள்ளன.
இந்த ஆறு மாவட்டங்கள் மூலமாகவே அகதிகள் இந்தியாவுக்குள் நுழைகின்றனர். இவ்வாறு தஞ்சம் புகும் மியன்மார் குடிமக்களுக்கு மிசோராம் மக்கள் முடிந்த உதவிகளைச் செய்வதாகவும் இது அம்மக்களின் பாரம்பரிய வழக்கம் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மியன்மாரில் நிலைமை சீரடையும் வரை அங்கிருந்து வரும் அந்நாட்டு குடிமக்களுக்கு மிசோராம் அரசு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்யும் என அம்மாநில முதல்வர் சோரம்தங்கா தெரிவித்துள்ளார்.
வரும் நாட்களில் அகதிகளாக வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

