கேரளாவில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி: கருத்துக்கணிப்பில் தகவல்
திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் இடதுசாரிகளின் ஆட்சி அமையும் என அண்மைய கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 140 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இம்முறை இடதுசாரிக் கூட்டணி 77 முதல் 85 இடங்களைக் கைப்பற்றும் என ஏபிபி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 54 முதல் 62 இடங்கள் கிடைக்கும் என்றும் பாஜகவுக்கு அதிகபட்சமாக இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிட்டும் என்றும் அக்கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
2,000 ரூபாய் நோட்டுகள் இரண்டு ஆண்டுகளாக அச்சடிக்கப்படவில்லை
புதுடெல்லி: 2,000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து, அவை செல்லாத நோட்டுகளாக அறிவிக்கப்படுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த இரண்டாண்டுகளாக அந்த நோட்டுகள் அச்சிடப்படவில்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். தற்போது புழக்கத்தில் உள்ள அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டு என்பதால், 2,000 ரூபாய் நோட்டுகள் பதுக்கப்படுவதையும் கருப்புப் பண புழக்கத்தை தடுக்கவுமே அவை அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாயாவதி: நான்கு மாநில தேர்தல்களில் தனித்துப் போட்டி
கோல்கத்தா: மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுவை, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். தங்கள் கட்சி தேர்தலுக்காக வகுத்துள்ள வியூகம் குறித்து எந்த விவரமும் தெரிவிக்க இயலாது என அவர் கூறியுள்ளார். கடந்த காலங்களில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது கசப்பான அனுபவமாக அமைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த ஆண்டு நடக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.
சீன தடுப்பூசி போட்டுக் கொண்டால் விசா அளிக்கப்படும் என்கிறது சீனா
புதுடெல்லி: இந்தியாவில் இருந்து சீனா செல்ல விரும்புவோர் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை போட்டுக் கொண்டால் அவர்களுக்கு விசா வழங்கப்படும் என புதுடெல்லியில் சீன தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளைப் பயன்படுத்த இந்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நேரடி விமானச் சேவையும் இல்லை. எனவே சீனாவின் இந்த அறிவிப்பு பெரும்பாலானோருக்கு பயனற்றதாக கருதப்படுகிறது. சீனாவில் கல்வி பயிலும் 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் மீண்டும் அங்கு சென்று படிப்பைத் தொடர அந்நாட்டு அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இம்மாண வர்களுக்காக சீனத் தயாரிப்பு தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்புவது குறித்து சீன அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக வும் தகவல் இல்லை. தனது தடுப்பூசிகளை வளரும் பொருளியல் சந்தையில் விற்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
50 லட்சம் பேர் பார்வையிட்ட சிலை
அகமதாபாத்: குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை இதுவரை 50 லட்சம் பேர் பார்வையிட்டுள்ள தாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அனைத்துத் தரப்பின ரையும் அச்சிலை கவர்ந்திருப்பதாக குஜராத் அரசு கூறியுள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து சிலை அமைந்துள்ள கேவாடியா பகுதிக்கு நேரடி ரயில் சேவைகள் இருப்பதால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

