புதுடெல்லி: இந்தியாவில் சென்ற 102 நாள்களில் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,871 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, மொத்த பாதிப்பு 11,474,605ஆக உயர்ந்தது.
தொடர்ந்து எட்டாவது நாளாக நாள்தோறும் 20,000 பேருக்கு மேல் கிருமித்தொற்று பதிவாகியுள்ளது. இப்போது, 252,364 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 172 பேர் மரணமடைய, கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 159,216 என்றானது.
ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று முன்தினம் மட்டும் 23,179 பேரை கொரோனா தொற்றியது உறுதிப்படுத்தப்பட்டது.
பொதுப் போக்குவரத்து நிறுத்தம்
இதனிடையே, குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. அங்கு ஒருநாள் பாதிப்பு மீண்டும் ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இவ்வாண்டில் இதற்குமுன் இல்லாத அளவாக, குஜராத்தில் நேற்று முன்தினம் 1,122 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, அகமதாபாத் நகரில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது; வாகனங்களை இயக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அந்நகரில் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடுமையான கட்டுப்பாடுகளுடன் கடைகளும் சந்தைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெளியூரில் இருந்து வருபவர்கள் தங்களது வீடுகளில் ஒரு வாரம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சூரத் மாநகராட்சி அறிவித்துள்ளது. 'வைர நகரம்' என அழைக்கப்படும் சூரத்தில் நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 350க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
பள்ளிகளை மூட ஆலோசனை
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் பள்ளிகளும் கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், அங்கு கிருமித்தொற்று பாதிப்பு கண்ட மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை ஏழு பள்ளிகளில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பள்ளிகளை மூடுவது குறித்து இன்னும் இரண்டு, மூன்று நாள்களில் முடிவெடுக்கப்படும் என்று மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்துஇருக்கிறார்.
இதற்கிடையே, டெல்லியிலும் கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவாக, நேற்று முன்தினம் 536 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, சுகாதார அமைச்சர், சுகாதாரத் துறைச் செயலாளர் மற்றும் பிற அதிகாரிகளுடன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

