தஞ்சாவூர்: கொரோனா கிருமிப் பரவலின் இரண்டாம் அலை தமிழக மக்களை மீண்டும் அலைக்கழிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த அலையின் தாக்கத்துக்கு தஞ்சை மாவட்டத்தில் கல்வி பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டி ருப்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட 439 பள்ளிகளில் படித்து வரும் 2.75 லட்சம் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக இம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் ஏற்கெனவே ஏழு பள்ளிகளில் பயிலும் 68 மாணாக்கர்கள் இத்தொற்றால் பாதிக்கப் பட்டிருப்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து, இரு தனியார் பள்ளிகளில் பயிலும் 27 மாணவர்களும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று தெரியவந்தது.
சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் இப்பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், எட்டு ஆசிரியர்கள், ஒன்பது பெற்றோர்களுக்கும் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 500க்கும் கீழ் படிப்படி யாகக் குறைந்து வந்த இந்தக் கிருமிப் பாதிப்பு, இப்போது மீண்டும் ஆயிரம் பேரை நெருங்கும் வகையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேலான மாணவர்கள் கிருமிப் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதால், 9 முதல் 12ஆம் வகுப்புகள் வரை படித்து வரும் 275,185 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிருமிப் பரவல் உறுதியானதைத் தொடர்ந்து ஆலத்தூர் பள்ளி, மேக்ஸ்வெல் பள்ளி, கிறிஸ்துவ பெண்கள் பள்ளி, கும்பகோணம் சரஸ்வதி பாடசாலையில் படிக்கும் மாணவர்களும் கிருமிப் பாதிப்புக்கு அதிகம் ஆளாகினர்.
இதனால், இந்த ஐந்து பள்ளிகளுக்கும் இரு வாரங்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 439 பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 275,185 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். 14 குழுவினர் கிருமி முறியடிப்பில் அணுக்கமாக ஈடுபடுத்தப்படுவர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்

