திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சுதாகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பினராயி விஜயன் போட்டியிடும் தர்மடம் தொகுதியில் நிலவும் சூழ்நிலை தமக்குச் சாதகமாக இல்லை என அவர் கூறியுள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. நடப்பு முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதையடுத்து காங்கிரஸ் சார்பில் அவரை எதிர்த்து அக்கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான சுதாகரன் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவர் தம்மால் போட்டியிட இயலாது என கைவிரித்துள்ளார்.
"என்னைத் தேர்வு செய்ததை வரவேற்கிறேன். அதற்கு நன்றியும் தெரிவிக்கிறேன். ஆனால், இந்தத் தொகுதியின் சூழல் எனக்குச் சாதகமாக இல்லை.
"மேலும் தேர்தலுக்கு முன் செய்ய வேண்டிய அடிப்படை வேலைகளுக்குப் போதிய கால அவகாசம் இல்லை. எனவே தேர்வுப் பட்டியலில் இருந்து என்னை நீக்குமாறு கட்சி நிர்வாகத்திடம் கூறியுள்ளேன்," என சுதாகரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதனால் காங்கிரஸ் தலைமை அதிர்ச்சியில் உள்ளது. முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்த அக்கட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால் சுதாகரன் போட்டியிட மறுத்து பின்வாங்கியது காங்கிரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன், பாஜகவுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே ரகசிய தேர்தல் உடன்பாடு இருப்பதாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்தார்.
உண்மையில் பாஜகவின் 'பி' அணி என்றால் அது காங்கிரஸ் கட்சிதான் என்றார் அவர்.