கோல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 2ஆம் தேதி எண்ணப்பட்ட பின்னர் அம்மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்டம் முடிவுக்கு வரும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சி ஆரம்பமாகும் என்றும் நேற்று முன்தினம் புருலியாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டு வன்முறைக்கு முதல்வர் மம்தா தலைமையிலான மாநில அரசு ஆதரவு அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், மாவோயிஸ்டுகளின் புதிய இனம் ஒன்றை திரிணாமுல் காங்கிரஸ் உருவாக்கி உள்ளதாக விமர்சித்தார். மாவோயிஸ்டுகள் அரசுப் பணத்தைக் கொள்ளையடிப்பதாகவும் அது ஏழைகளின் பணம் என்றும் குற்றம்சாட்டிய அவர், கொரோனா பொதுமுடக்க காலத்தில் கூட திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஊழலில் திளைத்ததாகக் குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தில் குற்றங்கள், குற்றவாளிகளின் எண்ணிக்கை பெருகியுள்ளதாகக் கவலை தெரிவித்த பிரதமர் மோடி, குற்றவாளிகள் யாரும் சிறையில் அடைக்கப்படவில்லை என்றார். மேலும் மாஃபியாக்களும் ஊடுருவல்காரர்களும் அங்கு சுதந்திரமாகச் செயல்படுவதாகச் சாடிய அவர், அனைவரும் கூட்டணி அமைத்து ஊழல் செய்கிறார்கள் என்று சாடினார்்.
"என்னைப் பொருத்தவரை மம்தா எனக்கு மகளைப் போன்றவர். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மகள்களில் அவரும் ஒருவர். அதனால்தான் மம்தாவுக்கு காலில் ஏற்பட்டுள்ள காயத்தை நினைத்து வருத்தப்படுகிறேன். அவரின் காயம் விரைவாகக் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்," என்றார் பிரதமர் மோடி.
மத்திய அரசின் திட்டங்கள் பலவற்றை திரிணாமுல் காங்கிரஸ் அரசு மேற்கு வங்கத்தில் இன்னும் செயல்படுத்தவில்லை என்று சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஆதிவாசிகளை ஒருபோதும் தனது சொந்தமாகக் கருதியதில்லை என்றார்.
இதற்கிடையே, மேற்கு வங்க வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்காகவும் வாக்குகளை அள்ளுவதற்காகவும் பாஜக தலைவர்கள் பண மூட்டைகளுடன் விமானங்களில் வந்திறங்குவதாக முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.
மனிதர்களின் துன்பமான காலகட்டத்தில் பாஜகவினர் காணாமல் போய் விடுவதாக அவர் பிரசாரக் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
"பாஜக கலகவாதிகளின் கட்சி. நாங்கள் கலகத்தையும் ரத்தம் சிந்துவதையும் விரும்புவதில்லை. பழிவாங்கும் அரசியல் மேற்கு வங்க மாநிலத்துக்குள் நுழைவதை விரும்பவில்லை," என்றார் மம்தா.
மம்தா என் மகளைப் போன்றவர். தேர்தலுக்குப் பின்னர் மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் தொடங்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி

