செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read

ரூ.241 கோடி வரிச்சலுகை பெற பிரபல நிறுவனம் முறைகேடு

புதுடெல்லி: வரிச்சலுகை பெறுவதற்காக பிரபல கேட்பரி நிறுவனம் உண்மைக்கு மாறான தகவல்களை அளித்திருப்பதாக சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மத்திய உற்பத்தித் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு ரூ.241 கோடி அளவுக்கு அந்நிறுவனம் வரிச் சலுகையைப் பெற்றுள்ளது என்றும் கடந்த 2009 முதல் 2011ஆம் ஆண்டு வரை இந்த வரி ஏய்ப்பு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்றும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. வரிச் சலுகையைப் பெறுவதற்காக கேட்பரி நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்த சில உறுப்பினர்கள், சில மேலாளர்கள் கூட்டாக ஆவணங்களில் திருத்தங்களை செய்துள்ளனர் என்றும் சிபிஐ சாடியுள்ளது.

கிழிந்த 'ஜீன்ஸ்' கால்சட்டை குறித்து கருத்து: முதல்வருக்கு கடும் எதிர்ப்பு

டேராடூன்: பெண்கள் ஆங்காங்கே கிழிந்துள்ள 'ஜீன்ஸ்' கால் சட்டை அணிவது குறித்து விமர்சித்த உத்தரகாண்ட் மாநில

முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இத்தகைய பெண்களால் சமூகத்தில் எத்தகைய நல்ல தாக்கம்

ஏற்படும் என அவர் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் முதல்வரின் இப்பேச்சு கடும் அதிர்ச்சி அளிப்ப தாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார். முதல்வர் பொறுப்பு வகிக்கும் ஒருவருக்கு இத்தகைய பேச்சு அழகல்ல என்றும் இது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் பேச்சு என்றும் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கரிமா கூறியுள்ளார். ஆம் ஆத்மி, சமாஜ்வாடி கட்சிகளும் முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

ரூ.10 லட்சம் கோடியாக வருமானம் உயரும் என அமைச்சர் நம்பிக்கை

புதுடெல்லி: பழைய வாகனங்களை அழிக்கும் முடிவால் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் ஆண்டு விற்பனை வருமானம் ரூ.4.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயரும் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வாகனங்கள் அழிப்பு கொள்கை குறித்த விளக்க அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்த அவர், மத்திய அரசின் இந்த நடவடிக்கை யால் நாட்டில் காற்று மாசு குறைந்து சுற்றுச் சூழல் மேம்படும் என்றார். பழைய வாகனங்களை அழித்ததற்கான சான்றை காட்டும் தனி நபர் வாகன உரிமையாளருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான விலையில் ஐந்து விழுக்காடு சலுகை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பேரழிவு ஏற்பட்டதாக ராகுல் புகார்

புதுடெல்லி: திட்டமிடப்படாத ஊரடங்கால் ஏற்பட்ட பேரழிவுகள் நாட்டை பேய் போல் பிடித்து ஆட்டுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இயலாமை, தொலை நோக்குப் பார்வையின்மையால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், மக்களின் வேதனையை விவரிக்க வார்த்தைகள் இல்லை என டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். ஊரடங்கால் பச்சிளங் குழந்தைகளின் இறப்பும் பிரசவத்தில் குழந்தைகள் இறப்பது அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டி வெளியான 'யுனிசெஃப்' அறிக்கையை ராகுல் காந்தி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

1,000 நாள்களில் கிராமங்கள் இணைப்பு

புதுடெல்லி: நாட்டின் அனைத்து கிராமங்களும் இணையம் வழி இணைக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி விரும்புவதாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். அடுத்து வரும் ஆயிரம் நாள்களுக்குள் இத்திட்டத்தைச் செயல்படுத்த பிரதமர் காலக்கெடு நிர்ணயித்து இருப்பதாகவும் அவர் மாநிலங்களவையில் குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பு எட்டு விழுக்காடு என்றும் 2019 முதல் இரண்டு லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை இத்துறை அளித்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.