புதுடெல்லி: முந்நூறு கிலோ 'ஹெராயின்' போதைப் பொருளைக் கடத்திச் செல்ல முற்பட்ட மூன்று படகுகளை இந்திய கடலோரக் காவல்படை பறிமுதல் செய்துள்ளது.
லட்சத்தீவுக்கு அருகே சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடலோரக் காவல் படையினரின் கண்ணில் படாமல் அப்படகுகள் அரபிக் கடலில் இந்திய எல்லையை கடந்து செல்ல முயன்றன.
நேற்று முன்தினம் சந்தேகத்தின் அடிப்படையில் இந்திய கடலோரக் காவல்படையினர் அந்த மூன்று படகுகளையும் சுற்றி வளைத்தனர். அவர்களுக்கு உதவ ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டது.
இதையடுத்து வீரர்கள் அப்படகுகளைச் சோதனையிட்டபோது 300 கிலோ ஹெராயின், 5 ஏகே ரக துப்பாக்கிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டாக்கள் உள்ளிட்டவை சிக்கின.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த கடற்படை அதிகாரிகள் மூன்று படகுகளையும் பறிமுதல் செய்து, அதில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
படகுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் எந்த நாட்டுக்கு கடத்திச் செல்லப்பட இருந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் இல்லை.

