புதுடெல்லி: இந்தியாவின் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்ட்டினை நேற்று சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய - பசிபிக் வட்டாரத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் விரிவாக்குவது உள்ளிட்டவை அந்தப் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. உயிர்க்கொல்லித் தொற்று உலகை அச்சுறுத்தி வரும் இந்த நெருக்கடி காலத்திலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நட்பின் கடப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்தோ - பசிபிக் வட்டாரத்தில் எண்ணெய்க் கசிவுகள், பேரழிவு மேலாண்மை, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேசினர்.

