கொவிட்-19 கிருமியைத் துடைத்தொழிக்க உலகெங்கும் தடுப்பூசி இயக்கம் சூடுபிடித்து வருகிறது.
மருந்துக்கு மட்டுமின்றி ஊசிக்கும் பற்றாக்குறை நிலவுவதால் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளும் இந்தியாவை இடைவிடாது நெருக்கி வருகின்றன.
ஒருமுறை பயன்படுத்தப்படும் ஊசிகளைத் தயாரிப்பதில் உலகிகில் முன்னணியில் இருக்கும் இந்தியா, உலகத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் முயற்சிகளை முடுக்கிவிட்டு உள்ளது. இந்தியாவின் 'எச்எம்டி' என்ற 'ஹிந்துஸ்தான் சிரஞ்சஸ் & மெடிக்கல் டிவைசஸ்' என்ற நிறுவனம், இப்போது ஒரு நிமிடத்திற்கு 6,250க்கும் அதிக 0.5 எம்எல் ஊசிகள் என்ற வேகத்தில் ஊசிகளை தரத்துடன் உருவாக்கி வருகிறது.
இந்த நிறுவனம், புதுடெல்லிக்கு அருகே ஃபரிதாபாத்தில் உள்ள தன் தொழிற்சாலையில் வழக்கமாக ஆண்டு ஒன்றுக்கு 2.5 பில்லியனுக்கும் அதிக எண்ணிக்கையில் பல்வேறு ஊசிகளை உருவாக்கும். ஆனால் இப்போது கொவிட்-19 காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்தும் குறிப்பிட்ட வகை ஊசிகளுக்குத் தேவை கூடியுள்ளது.
வரும் ஜூன் மாத வாக்கில் ஒரு பில்லியன் ஊசியைத் தயாரிக்கவும் இந்த ஆண்டு செப்டம்பர் வாக்கில் 1.2 பில்லியன் ஊசிகளைத் தயாரிக்கவும் நிறுவனம் செயலில் இறங்கி இருக்கிறது.
கொவிட்-19 ஊசிக்கான தேவை யுடன் தடுப்பு மருந்துக்கும் தேவை கூடி வருவதால் பிரேசில், சவூதி அரேபியா, மொராக்கோ போன்ற நாடுகள் தங்களுக்கு உடனடியாக மருந்து தேவை என இந்தியாவை நெருக்குகின்றன.
ஊசிகளைப் போலவே ஊசி மருந்து தயாரிப்பிலும் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இருந்தாலும், உள்நாட்டுத் தேவை அதிகமாக இருப்பதால் அஸ்ட்ராசெனிகா மருந்தை மேற்கொண்டும் அனுப்புவது தாமதம் அடையும் என்று அந்த நாடுகளிடம் இந்தியாவின் சீரம் மருந்து நிறுவனம் தெரிவித்துவிட்டது.
தனக்கு மேலும் 120 மில்லியன் மருந்து தேவை என்று இந்திய அரசு சீரம் உட்பட இரு இந்திய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆகையால் இந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டிய அவசர அவசியம் இந்திய நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், உலகத் தேவைகளைச் சமாளிப்பதிலும் இந்தியா தனது ஒருமித்த கவனத்தைத் திருப்பிவிட்டு உள்ளது. இந்தியா இதுவரை மொத்தம் 75 நாடுகளுக்கு ஏறக்குறைய எட்டு மில்லியன் ஊசிமருந்தை கொடையாக அளித்துள்ளது.

