புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று நடைபெறுவதாக இருந்த வாக்கெடுப்பு நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவாவில் ஐநா மனித உரிமைப் பேரவையின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இம்முறை இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த குற்றச்செயல்களுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அங்கு மனித உரிமைகள் மீறப்படுகின்றனவா என கண்காணிக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா, ஐநா பேரவையில் வாக்களிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கைக்கு எதிராக பல நாடுகள் வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில், நேற்று கடைசி நேரத்தில் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. மனித உரிமைப் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட குழப்பங்களே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் ஏராளமானோர் போர்க்காலத்தின்போது காணாமல் போனதாகவும் தொண்டூழிய அமைப்புகள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனவர்களின் நிலை குறித்து தெரியவில்லை. அவர்களின் குடும்பத்தார் நீதி கேட்டுப் போராடி வருகிறார்கள். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானம் அதற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.