'மகாராஷ்டிராவில் தொற்று அதிகரிப்பு மூன்று வாரங்களுக்கு நீடிக்கும்'
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாத நடுப்பகுதியில் இருந்து கொவிட்-19 தொற்று அதிகரித்தவண்ணம் உள்ளது.
இம்மாதம் 17ஆம் தேதியில் இருந்து அங்கு நாள்தோறும் 20,000க்கு மேற்பட்டோர் கொரோனா பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் கடந்த ஞாயிறன்று 30,000க்கும் மேற்பட்டோரைப் புதிதாக கொரோனா தொற்றிய நிலையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை அந்த எண்ணிக்கை 24,645ஆகப் பதிவானது. அந்நாளில் மேலும் 58 பேர் கொரோனா தொற்றுக்குப் பலியாகினர்.
இதையடுத்து, அம்மாநிலத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 2,504,327ஆகவும் மரண எண்ணிக்கை 53,456ஆகவும் உயர்ந்தது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நகரங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் என்று மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப்பே தெரிவித்திருக்கிறார்.
"மக்களிடையே உரையாற்றியபோது, கிருமித்தொற்று அதிகரிப்பு நீடித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருந்தார். முதல்வரிடம் மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளேன். கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியிருக்கும்," என்று திரு டோப்பே கூறினார்.
அத்துடன், அதிகமானோரிடத்தில் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், பொது முடக்கத்தைத் தவிர்க்க வேண்டுமெனில் மக்கள் கொவிட்-19 கட்டுப்பாடுகளையும் நடைமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வேளையில், கொரோனா தொற்று அதிகரிக்கும் போக்கு இன்னும் மூன்று வார காலத்திற்கு நீடிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
"பல்வேறு நோய்த் தொற்றியல் நிபுணர்களிடம் பேசியதை அடுத்து, ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பிறகு நிலைமை மட்டுப்படும் என எதிர்பார்க்கிறோம்," என்று மாநில அரசால் நியமிக்கப்பட்ட மரணத் தணிக்கைக் குழுவின் தலைவர் டாக்டர் அவினார் சுபே கூறினார்.
இதனிடையே, நாளொன்றுக்கு 200,000 முதல் 250,000 பேருக்குத் தடுப்பூசி போடப்படுவதாகவும் கடந்த திங்கட்கிழமை வரை 4.5 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது என்றும் அமைச்சர் டோப்பே தெரிவித்தார்.
ஒரே நாளில் 199 பேர் மரணம்
இதனிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 40,715 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 199 பேர் இறந்துவிட்டதாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சு நேற்றுக் காலை ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது.
இதையடுத்து, ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 11.68 மில்லியனாகவும் மரண எண்ணிக்கை 160,166ஆகவும் அதிகரித்தது.

