இந்தியாவில் இருமுறை உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது
புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் துவங்கிவிட்டதாகக் கூறப்படும் நிலையில் நேற்று முன்தினம் மேலும் புதிதாக 53,476 பேருக்குத் தொற்றுப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு அன்றாடம் பதிவாகும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
மேலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 251 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகி உள்ளனர்.
நாடு முழுவதும் ஐம்பது மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சு, நேற்று முன்தினம் 26,490 பேர் கொவிட்-19 நோயில் இருந்து குணமடைந்ததாகத் தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக நாடு முழுவதும் கிருமித்தொற்றுப் பாதிப்பு வெகுவாக கட்டுக்குள் வந்தது.
தினமும் ஒரு லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைய சில மாதங்களாக அந்த எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் குறைவாக இருந்தது.
இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றுப்பரவல் திடீரென அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றின் இரண்டாவது அலை தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்தியாவில் 'இருமுறை உருமாறிய கொரோனா' வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து சேகரிக்கப்பட்ட சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 771 மாதிரிகளில் உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் காணப்படும் கொரோனா கிருமி வகைகளை மரபணு வரிசைப்படுத்தி ஆய்வு செய்வதற்காக பத்து தேசிய ஆய்வுக்கூடங்களை உள்ளடக்கிய குழு ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சு அமைத்துள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில்தான் உருமாறிய கொரோனா கிருமித்தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
எனினும் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு இந்த உருமாறிய கொரோனா கிருமித்தொற்றுதான் காரணம் என்று ஆய்வு செய்யாமல் கூற இயலாது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

