கோல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி போன்று பொய் பேசும் பிரதமரை தாம் இதுவரை பார்த்தது இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் விஷ்ணுபூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், பாஜகவினர் மேற்கு வங்க மாநிலத்துக்குள் சமூக விரோதிகளை அழைத்து வந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்கத்தின் கலாசாரத்தை அழிக்க பாஜக முயற்சி செய்வதாக குறிப்பிட்ட அவர், மத்திய அரசு விவசாயிகளை அலட்சியப்படுத்துவதாகச் சாடினார்.
"பிரதமர் மோடி பொய்களை மட்டுமே கூறுகிறார். டெல்லியில் கடந்த நான்கு மாதங்களாக விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
"நாட்டின் அனைத்து வளத்தையும் பணத்தையும் தொழிலதிபர் அதானி கொள்ளையடித்து வருகிறார். இனிமேல் மோடி, அமித் ஷா, அதானி ஆகியோர் மட்டுமே செழித்து வாழ்வார்கள். மக்களுக்கு கண்ணீர் மட்டுமே மிஞ்சும்," என்றார் மம்தா.
இந்நிலையில் தேர்தல் நெருங்குவதால் முதல்வர் மம்தாவுக்குத் தோல்வி பயம் அதிகரித்துவிட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மண்ணின் மைந்தரே முதல்வராக அறிவிக்கப்படுவார் என உறுதி அளித்தார். மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்கான காலம் கனிந்துவிட்டது என்றும் பிரதமர் மோடி மேலும் கூறினார்.

