புதுடெல்லி: மிக விரைவில் டெல்லி நகருக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட விவசாய குழுக்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த நான்கு மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். நெடுஞ்சாலை ஓரங்களில் தங்கி, அங்கேயே உண்டு உறங்கி வரும் விவசாயிகளின் இந்தப் போராட்டமானது நேற்றுடன் 120 நாளை எட்டியது.
இந்நிலையில் மீண்டும் டெல்லி நகருக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபடுவது என விவசாயக் குழுக்கள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அடுத்த சில தினங்களுக்குள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்குள் நடத்தப்படும் போராட்டத்துக்காக அங்கு குவியத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

