25 கிலோ தங்கம் பறிமுதல்
ஹைதராபாத்: ஹைதராபாத் அருகே நெடுஞ்சாலை ஒன்றில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின்போது 25 கிலோ தங்கக்
கட்டிகளைக் கடத்தி வந்த கார் ஒன்று சிக்கியது. அதில்
இருந்த மூன்று பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலிசார் தங்கக்கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். அதன் சந்தை மதிப்பு ரூ.11.50 கோடி என்றும் கோல்கத்தாவில் இருந்து கடத்தி வரப்பட்டது என்றும் போலிஸ் தரப்பு தெரிவித்தது.
இரண்டு ஆண்டுகளில் 13 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
அகமதாபாத்: குஜராத் அரசு மருத்துவமனைகளில் இயங்கி
வரும் பச்சிளங் குழந்தைகள் நோய்ப் பாதுகாப்பு பிரிவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 13,000 குழந்தைகள் இறந்துள்ளன. மொத்தம் 106,017 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நாள் ஒன்றுக்கு சராசரியாக 18 குழந்தைகள் வீதம் இறந்து போயுள்ளன. பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் காரணமாக குழந்தைகள் இறந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
விளம்பரங்கள்: டுவிட்டர் உறுதி
புதுடெல்லி: டுவிட்டர் தளத்தில் அரசியல் விளம்பரங்கள் இடம்பெறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அரசியல் விளம்பரங்களுக்கு டுவிட்டர் தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஐந்து மாநிலத் தேர்தலை ஒட்டி டுவிட்டரில் விளம்பரங்கள் வெளியாவதைத் தடுக்க வேண்டுமென சில தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர். இதை
யடுத்து நுணுக்கமான வழிமுறைகள் மூலம் அரசியல் விளம்பரங்களை தடுப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

