மும்பை: மும்பையின் பந்தூப் பகுதியில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் சன்ரைஸ் மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் உள்ள 'டிரீம்ஸ் மால்' என்னும் கடைத்தொகுதியில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்குப் பற்றிய தீ, மருத்துவமனைக்கும் பரவியது.
இந்த தீ விபத்தில் 10 கொவிட்-19 நோயாளிகள் பலியாகி விட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக இரண்டு கொரோனா நோயாளிகள் மட்டும் இறந்துவிட்டதாகவும் மற்றவர்கள் தீக்காயங்களுக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சில மணி நேரங்களில் தீயணைப்புப் படையின் தலைமை அதிகாரி ஒருவர் கூறுகையில், பலி எண்ணிக்கை பத்தாக அதிகரித்திருப்பதாகக் கூறினார்.
இந்நிலையில் இறந்தவர்கள் யாரும் தீயில் கருகி இறக்கவில்லை என்றும் அவர்கள் கொவிட்-19 தொற்றுப் பாதிப்பால்தான் மாண்டனர் என்றும் மருத்துவமனை அறிக்கை ஒன்று தெரிவித்தது.
சம்பவ இடத்தை ஆய்வுசெய்த மும்பை காவல்துறை ஆணையாளர் கூறுகையில், "இது ஒரு மோசமான தீ விபத்து.
"மருத்துவமனை நிர்வாகத்தினரின் மெத்தனப் போக்கே இதற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படும்," என்று கூறியுள்ளார்.

