கோல்கத்தா: மாநிலத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை அபகரிக்க பாஜக ஆதரவுடன் புதிய கட்சி இந்தத் தேர்தலில் முளைத்துள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சாடினார். அவர் பெயர் குறிப்பிடாமல் கூறிய அந்தக் கட்சி முஸ்லிம் மதகுரு அப்பாஸ் சித்திக்கின் இந்திய மதச்சார்பற்ற முன்னணிக் கட்சி என்று கூறப்படுகிறது.
மேற்கு வங்கம், அசாமில் முதல் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்துள்ளது. நாளை முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 47 தொகுதிகளுக்கும் வரும் சனிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா, திரிணாமுல் காங்கிரசின் வாக்குகளைப் பிரிக்கும் வேளையில் பாஜக ஈடுபட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

