டாக்கா: கொவிட்-19 தொற்று பரவத்தொடங்கிய பின் 15 மாதங்கள் கழித்து பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலாக வெளிநாடு சென்றுள்ளார்.
வங்காள தேசத்தின் 50வது சுதந்திர நாள் மற்றும் அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்குமாறு அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா விடுத்த அழைப்பின்பேரில் அங்கு சென்றுள்ளார். சிறப்பு விமானம் மூலம் டாக்கா சென்ற பிரதமர் மோடியை வங்காள தேசப் பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்திற்கே சென்று பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். இந்த பயணத்தின்போது வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இதில், ரோகிங்யா அகதிகள் விவகாரம், பொருளியல், பாதுகாப்பு உள்ளிட்டவை பேசப்படும். அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என வெளியுறவுத்துறை செயலாளர் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்கலா கூறியுள்ளார். அங்குள்ள பிரசித்தி பெற்ற ஜஷோரிஷ்வரி காளி கோயிலுக்குச் சென்று வழிபடவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

