அகமதாபாத் மாணவர் விடுதி மூடப்பட்டது; இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனமான ஐஐஎம்மில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு பயிலும் ஒரு சில மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்ததைஅடுத்து அவர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவருக்கு கிருமித்தொற்று இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவருடன் தங்கி இருந்த மாணவர்களுக்கும் சோதனை செய்யப்பட்டது. அவர்களுக்குப் பாடம் நடத்திய போராசியர்களுக்கும் பரிசோதனை நடந்தது. மொத்தமாக 40 பேருக்கு கிருமிப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தனிமைப்
படுத்தப்பட்டனர். விடுதியும் மூடப்பட்டது.
அதுபோலவே காந்திநகரில் உள்ள ஐஐடி நிறுவனத்தில் பயிலும் 25 மாணவர்கள், பேராசியர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களும் தனிமைப்
படுத்தப்பட்டுள்ளனர். தொற்று ஏற்பட்டுள்ள பெரும்பாலான மாணவர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதால் அவர்களுக்கு சிகிச்சை தேவைப்படவில்லை.
அனைவரும் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் கிருமித்தொற்று உள்ள மாணவர்கள் தனியாக அமர வைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது.
ஐஐஎம் அதிகாரி ஒருவர், "பலர் அறிகுறியற்றவர்களாக இருக்கிறார்கள். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக மீண்டு வருகிறார் கள்.
"கடந்த ஆண்டிலிருந்து இணையம் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. வளாகத்தில் நுழைவதும் வெளியேறுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கிருமி பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, அகமதாபாத் நகரில் தொற்று வேகமாகப் பரவுவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அகமதாபாத் மாநகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. அதன்படி, அகமதாபாத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான விலங்கியல் பூங்கா, பொழுதுபோக்கு பூங்காக்கள், நீர்நிலை சுற்றுலா தலங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.
அதேபோல இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

