புதுடெல்லி: கடும் நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவில் உள்ள தனது எல்லாப் பங்குகளையும் விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இது குறித்து, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில், "2007ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதில் இருந்து ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதை மீட்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
"தற்போது ஓரளவுக்கு நன்றாக இயங்கினாலும் நாளொன்றுக்கு 20 கோடி ரூபாய் இழப்பை அந்நிறுவனம் சந்தித்து வருகிறது.
"பல ஆண்டுகளாக நஷ்டம் சேர்ந்து தற்போது அது 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு மேலும் அதை மீட்க மத்திய நிதி அமைச்சரிடம் உதவி கேட்க முடியாது.
"இந்தச் சூழ்நிலையில், நிறுவனத்தில் உள்ள அரசின் பங்குகளை முழுமையாக விற்பது அல்லது நிறுவனத்தை இழுத்து மூடுவது என்ற இரு வாய்ப்புகள் மட்டுமே இருந்தன.
"அதனால்தான் பங்குகளை விற்று தனியார்மயமாக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு முன், மத்திய அரசு இரட்டை மனநிலையில் இருந்தது. தற்போது உறுதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவை வாங்குவதற்கு சில நிறுவனங்கள் முன் வந்துள்ளன. வரும் மே அல்லது ஜூன் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்," என்று அவர் கூறினார்.

