மகாராஷ்டிராவில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க திட்டம் எனத் தகவல்
மும்பை: கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இடையே நடைபெறும் வார்த்தைப் போர் காரணமாக மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டணி அரசில் பங்கேற்றுள்ள தேசியவாத காங்கிரஸ், அதிலிருந்து விலகி பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைக்கப் போவதாக வெளியான தகவல் மகாராஷ்டிரா அரசியல் களத்தில் பரபரப்பையும் புது விவாதங்களையும் எழுப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுப்பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அம்மாநில அரசு சுகாதார நெருக்கடியுடன் அரசியல் கள நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளது.
மகாராஷ்டிராவில் தற்போது முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
மும்பை மாநகர காவல்துறை ஆணையரான பரம்வீர் சிங் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்தே ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.
முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பரம்வீர் சிங் எழுதிய கடிதம் ஒன்றில், காவல்துறை விவகாரங்களில் மாநில உள்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான அனில் தேஷ்முக்கின் தலையீடு அதிகம் இருப்பதாகவும் மும்பையில் உள்ள மதுபான விடுதிகள், கேளிக்கை மையங்களில் இருந்து மாதந்தோறும் நூறு கோடி ரூபாய் லஞ்சம் வசூலித்துத் தருமாறு அவர் நிர்பந்தம் செய்தார் என்றும் பரம்வீர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்க மூத்த தலைவர்கள் சிலர் மறுத்ததன் காரணமாகவே வேறு வழியின்றி அனில் தேஷ்முக் அப்பதவியில் அமர்த்தப்பட்டதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
அனில் தேஷ்முக்கை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்தான் தேர்வு செய்தார் என்றும் இது எதிர்பாராத விபத்து போன்றது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சஞ்சய் ராவத்தின் இந்தப் பேச்சு தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக மும்பை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி அரசு சிறப்பாகச் செயல்படும் வேளையில் அதை கெடுக்கும் வகையில் யாரும் செயல்படக் கூடாது என தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரான அஜித் பவார் கூறியுள்ளார்.
லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கியுள்ள, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறுகையில், தம் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணையை மேற்கொள்ளும்படி முதல்வரைக் கேட்டுக் கொண்டதாகவும் உண்மை விரைவில் வெளிப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதையடுத்து தேசியவாத காங்கிரசும் பாஜகவும் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிடுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சரத்பவாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அனைத்து விஷயங்களையும் வெளியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.