கோல்கத்தா: மேற்கு வங்க மக்களை பாஜக பணம் கொடுத்து விலைக்கு வாங்க பார்ப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
நேற்று முன்தினம் நந்திகிராம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், பிரதமர் நரேந்திர மோடி நிலங்களை அபகரிக்க முயற்சி செய்வதாகவும் சாடினார்.
தொழிலதிபர் அதானியின் நண்பரான பிரதமர் மோடி மக்களிடம் இருந்து அனைத்தையும் பறித்துக் கொள்வார் என்றும், மேற்கு வங்க தேர்தலில் பாஜகவால் வெற்றிபெற முடியாது என்றும் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
"மேற்கு வங்க மாநிலத்தை வெளி மாநிலத்தவர்களால் ஒருபோதும் ஆள முடியாது. முதற்கட்டமாக 30 தொகுதிகளுக்கு நடந்துள்ள தேர்தலில் பாஜக 26 தொகுதிகளில் வெற்றிபெறும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வதை ஏற்க இயலாது," என்றார் முதல்வர் மம்தா.
இதற்கிடையே நரேந்திரபூர் பகுதியில் 56 நாட்டு வெடிகுண்டுகளை மேற்குவங்க போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் நரேந்திரபூரில் வெடிகுண்டு தயாரிக்கப்படுவதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அங்குள்ள ஒரு குடிசை வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், மாநிலம் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


