திருவனந்தபுரம்: பல்வேறு உலக நாடுகளில் பணியாற்றி வந்த 1.2 மில்லியன் கேரள மக்கள் கொரோனா விவகாரத்தால் நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளதாகத் தெரிகிறது.
வேலை இழப்பு தங்கள் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த நான்கு மில்லியன் பேர் வெளிநாடுகளில் வசித்தும் வேலை பார்த்தும் வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்றனர்.
கேரளாவில் ஐந்து குடும்பங்களில் ஒருவர் வீதம் வெளிநாடுகளில் பணியாற்றுவதால் அம்மாநிலத்தின் ஜிடிபியில் அவர்களின் பங்களிப்பு 36 விழுக்காடாக உள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூரில் பணியாற்றும் சுஹைல் பட்டன்மார் என்ற 31 வயது இளையரும் கடந்த டிசம்பரில் கேரளா திரும்பியுள்ளார்.
தனது மூன்று இளைய சகோதரர்கள், நான்கு நெருங்கிய நண்பர்கள் வளைகுடா நாடுகளில் பணியாற்றி வந்ததாகவும் தொற்றுப்பரவல் விவகாரத்தால் ஏழு பேரும் வேலையை இழந்து நாடு திரும்பியுள்ளனர் என்றும் கூறுகிறார் சுஹைல்.
தமக்கு குறைந்தபட்சம் வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பேனும் கிடைத்துள்ளது என்று அவர் கூறுகிறார்.
கேரளாவில் வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் வெளிநாடு வாழ் கேரள மக்களின் பங்களிப்பு அதிகம் என்கிறார் அம்மாநிலத்தைச் சேர்ந்த குடிபெயர்வு ஆய்வாளர் இருதய ராஜன்.
"வெளிநாடு சென்றவர்கள் ஈட்டிய பணத்தில்தான் அவர்களின் குடும்பத்தார் வீடுகளைக் கட்டியுள்ளனர். அடுத்த தலைமுறையை படிக்க வைத்துள்ளனர். எனவே நாடு திரும்பிவிட்டாலும் அரசியல், பொருளாதாரத் தளங்களில் அவர்களுக்குரிய முக்கியத்துவம் இப்போதும் நீடிக்கிறது.
"வேலையிழந்து திரும்பிய அனைவருமே புது வேலையை தேடிக் கொள்வதில் முனைப்பாக உள்ளனர். வேலை கிடைப்பது தாமதமாகும்போது விரக்தி ஏற்படுகிறது. நாடு திரும்பும்போது தங்கள் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் என்றோ, தாங்களும் வாக்களிக்கப் போவதோ பெரும்பாலானோருக்குத் தெரியாது.
"எனவே 1.2 மில்லியன் மக்கள் அளிக்கப்போகும் வாக்கு தேர்தல் முடிவுகளில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்," என்கிறார் ராஜன்.
மாநிலத்தின் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப சமூக வலைத்தளங்களில் விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் நடந்து வருகின்றன. அவற்றுள் மேற்குறிப்பிட்ட 1.2 மில்லியன் பேரும்கூட பங்கேற்கும் வாய்ப்புண்டு.
வெளிநாடுகளில் இருந்து திரும்பிய இவர்கள் அளிக்கப்போகும் ஆதரவு எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்கிறார்கள் அரசியல் களப் பார்வையாளர்கள்.

