திரிணாமுல் காங்கிரசார் தேர்தல் களத்தில் தடுமாறுவதாக பாஜக விமர்சனம்
கோல்கத்தா: பீகார், உத்தரப்பிரதேசத்தில் இருந்து எதிர்க்கட்சியினர் ரவுடிகளை அழைத்து வந்து தம் மீது தாக்குதல் நடத்துவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
நேற்று முன்தினம் தாம் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், சுதந்திரமான, வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் விருப்பம் என்றார்.
"அவர்கள் (எதிர்க்கட்சியினர்) வந்தால் பெண்கள் பாத்திரங்களை கொண்டு அடிக்க வேண்டும். கலாச்சாரம் மீது அன்பு கொள்ளாதவர்கள் இங்கு அரசியல் செய்ய முடியாது. நந்திகிராமில் ரவுடித்தனம் காணப்படுகிறது.
"என்னாலும் விளையாட்டுகளை விளையாட முடியும். நான் வங்கப்புலி. என்னால் சிங்கம் போலவும் பதிலடி கொடுக்க முடியும்," என்று மம்தா பானர்ஜி ஆவேசமுடன் பேசினார்.
முன்னதாக நந்திகிராம் தொகுதியில் பிரமாண்ட பிரசாரப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. காலில் அடிபட்டதால் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இந்தப் பேரணியில் கலந்து கொண்டார் மம்தா.
மேலும், எட்டு கிலோ மீட்டர் தூரத்தை அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே கடந்தார்.
இதற்கிடையே வெளிநாட்டு மண்ணில் இருந்தபடி பிரதமர் மோடி மட்டும் பிரசாரம் செய்யலாமா? என மம்தா கேள்வி எழுப்பி உள்ளார்.
பங்ளாதேஷ் பயணத்தின்போது மறைமுகமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் பிரதமர் மோடியின் கடப்பிதழ், விசாவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவர், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என்றார்.
இதற்கிடையே மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுகளை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பாஜக தகுந்த ஆதாரங்களுடன் மம்தா ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி வருவதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் தடுமாறுவதாக மேற்கு வங்க பாஜக பிரமுகர்கள் கூறியுள்ளனர். இருதரப்புக்கும் இடையேயான வார்த்தைப்போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.