திருவனந்தபுரம்: காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பாஜக ஆகிய மூன்று கட்சிகள் இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார்.
மூன்று கட்சிகளுக்கும் இடையேயான ரகசிய உறவு அண்மைய தேர்தல் பிரசாரத்தின் மூலம் அம்பலமாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையாள நடிகரும் பாஜகவின் திருச்சூர் தொகுதி வேட்பாளருமான சுரேஷ் கோபி அண்மையில் குருவாயூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் காதரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும், தலசேரி தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஷம்சீரை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
சுரேஷ் கோபியின் பிரசாரம் மூலம் பாஜக, காங்கிரஸ் இடையே ரகசிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது தெளிவாகிறது என அவர் கூறியுள்ளார்.
"சுரேஷ் கோபியின் கருத்து இதை உறுதி செய்கிறது. தலசேரி, குருவாயூர் தொகுதிகளில் பாஜகவுக்கு ஓரளவுக்கு வாக்கு வங்கி உள்ளது. அந்த வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ரகசிய உடன் பாட்டை விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளது.
"பாஜக, காங்கிரஸ் ரகசிய உடன்பாடு இதற்கு முன்பே பகிரங்கமாக தெரிய வந்தது. கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என்று சட்டப்பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை. பாஜகவோடு இணைந்து கொண்டு காங்கிரசும் தீர்மானத்தை எதிர்த்தது," என்று முதல்வர் பினராயி விஜயன் சுட்டிக்காட்டி உள்ளார்.

